புத்ராஜெயா, ஏப்ரல்.13-
ஏப்ரல் 1-ம் தேதி புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் 21 வயது இளைஞர் தொடர்ந்து சுவாசக் கருவியின் உதவியுடன் இருந்தாலும், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.
அந்த இளைஞருக்குத் தொடர்ந்து மருந்துகள் செலுத்தப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை தேறி வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அவரது நிலை சீராக முன்னேறி வருவதற்கு இறைவனை வேண்டிக் கொள்வோம் என்றார். நேற்றைய நிலவரப்படி, மருத்துவமனைகளில் மொத்தம் 30 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 17 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 13 பேர் சுகாதார அமைச்சின் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுகின்றனர் என்றார்.