மோசமான இணையச் சேவை – இன்று மாலை 5 மணிக்குள் தீர்வளிக்கப்பட வேண்டும் ! – அமைச்சர் பாஃமி பாஃட்சீல் உத்தரவு

தாப்பா, ஏப்ரல்.13-

பேரா, ஆயர் கூனிங்கிலும் பிற பகுதிகளிலும் இணைய இணைப்பு மோசமாக இருப்பதாக வந்த புகார்கள் குறித்து இன்று மாலை 5 மணிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் அமைச்சர் டத்தோ பாஃமி பாஃட்சீல் உத்தரவிட்டுள்ளார். பதிலளிக்கத் தவறினால் மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

கட்டணம் வசூலிப்பதில் அவர்கள் மிகவும் வேகமாக இருக்கிறார்கள். ஆனால் பயனர்கள் புகார் அளித்தால், மாதக் கணக்கில் தீர்வு காண்பதில்லை. நான் போதுமான பொறுமை காத்துவிட்டேன். இன்று மாலை ஐந்து மணிக்குள் தீர்வு இல்லையென்றால், நாளை எம்சிஎம்சி நடவடிக்கை எடுக்கும் என்று ஆயர் கூனிங்கில் நடைபெற்ற மக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார். இணைய இணைப்பு குறித்த அரசாங்கத்தின் கொள்கை தெளிவாக உள்ளது என்றும், எங்கு சாலை உள்ளதோ, அங்கு இணையம் இருக்க வேண்டும். ஆனால் பிடோர், தாப்பா நாடாளுமன்றத் தொகுதி உட்பட பல முக்கியச் சாலைகளில் போதுமான இணைப்பு இல்லை என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.

முன்னதாக மார்ச் 5-ம் தேதி நாடு முழுவதும் எம்சிஎம்சி நடத்திய இணைய வேகப் பரிசோதனையில், மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகிலும் பல முக்கியச் சாலைகளில் இணைய இணைப்பு மோசமாக இருப்பது கண்டறியப்பட்டது. எம்சிஎம்சி உருவாக்கிய நெக்சஸ் செயலி மூலம் இணைய வேகம் குறைந்தபட்சம் வினாடிக்கு 7.5 Mbps இருப்பதை உறுதிச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஓராண்டுக்குள் இது 10 Mbps ஆக உயர்த்தப்படும் என்றும் பாஃமி கூறினார்.

WATCH OUR LATEST NEWS