நூற்றுக்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் கைது

கோலாலம்பூர், ஏப்ரல்.13

கோலாலம்பூரில் உள்ள சௌ கிட் சந்தை என்றழைக்கப்படும் பாசார் ராஜா போட்டில் இன்று மலேசிய குடிநுழைவுத் துறை நடத்திய அதிரடி சோதனையில் சட்டத்திற்குப் புறம்பாக தங்கியிருந்ததாக நம்பப்படும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் கைது செய்வதைத் தவிர்க்க சிதறி ஓடினர். ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த சில வெளிநாட்டினர் தப்பிக்க முயன்றனர். காலை 9.45 மணிக்கு தொடங்கிய ‘ஓப்ஸ் கூதிப்’ சோதனை நடவடிக்கையில் சந்தை ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் உட்பட 103 சட்டத்திற்குப் புறம்பான வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டதாக கோலாம்பூர் கிளையின் இயக்குநர் வான் முகமட் சௌபீ வான் யுசோப் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் 21 முதல் 58 வயது வரையிலான 80 ஆண்களும் 23 பெண்களும் அடங்குவர். இந்த நடவடிக்கையில் 136 பேர் சோதனை செய்யப்பட்டதில், 59 இந்தோனேசிய ஆண்கள், 21 இந்தோனேசியப் பெண்கள், 13 வாங்காளதேச ஆண்கள், மூன்று மியன்மார் ஆண்கள், இரண்டு மியன்மார் பெண்கள் உட்பட 103 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். மேலும், நான்கு இந்திய ஆண்களும் ஒரு யேமன் ஆணும் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார். இப்பகுதியில் வெளிநாட்டினர் இருப்பதாக வந்த புகார்களின் அடிப்படையிலும், வெளிநாட்டுவாசிகளின் முக்கிய இடமாக இருந்ததாலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. நாட்டில் பணிபுரிய விரும்பும் வெளிநாட்டினர் உட்பட அனைவரும் சட்டப்படி சரியான பயண ஆவணங்களையும் அனுமதியையும் பெற்றிருக்க வேண்டும் என்றும், முழுமையான ஆவணங்கள் வைத்திருக்கும் வெளிநாட்டினரை மட்டுமே பணியமர்த்த முதலாளிகளுக்கு அறிவுறுத்தப்படுவதாகவும் வான் முகமட் சௌபீ கூறினார்.

WATCH OUR LATEST NEWS