சபா பெர்ணம், ஏப்ரல்.13-
டெங்கில் பள்ளிவாசல் கட்ட திட்டமிடப்பட்டுள்ள இடத்தில் உள்ள தனியார் வழிபாட்டுத் தலம் காலி செய்யப்படாவிட்டால் இடிக்கப்படும் என்று சிலாங்கூர் மாநில முதல்வர் அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார். அப்பகுதி முஸ்லிம்களின் நலனுக்காக இந்த பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்ற சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராபுஃடின் இட்ரிஸ் ஷாவின் விருப்பத்திற்கு ஏற்ப இஃது இருக்கும் என்றும் அவர் கூறினார்.
அந்த இடம் அதிகாரப்பூர்வமாக சொந்தமாக்கப்பட்ட நிலம் அல்ல என்றும், மாநில சட்டங்கள் அல்லது கூட்டரசு அரசியலமைப்பின்படி அதன் இருப்பு சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார். அஃது ஒரு தனிப்பட்ட வழிபாட்டுத் தலம் மட்டுமே, பதிவு செய்யப்பட்ட வழிபாட்டுத் தலம் அல்ல. எனவே, அப்பகுதி முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக பள்ளிவாசல் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் அமைந்திருப்பது முறையற்றது என்று அவர் தெரிவித்தார். இந்த பிரச்சினை ஒரு மாதத்திற்குள் மாநில அரசால் தீர்க்கப்படும் என்றும், வழிபாட்டுத் தலத்தின் உரிமையாளர் அந்த இடத்தை காலி செய்ய ஒப்புக் கொண்டதாகவும் அமிருடின் கூறினார். இந்த விவகாரத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், அதே நேரத்தில் இன, மத நல்லிணக்கம் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.