குவாந்தான், ஏப்ரல்.14-
அண்மையில் பகாங், ரவூப், மூசாங் கிங் டுரியான் தோட்டத்தில் அமலாக்கத் தரப்பினர் மேற்கொண்ட நடவடிக்கையில் அரசுப் பணியாளர்களைக் கடமையைச் செய்யவிடாமல் தடுத்ததாகக் கூறப்படும் புகார் தொடர்பில் போலீசார் ஐவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யவிருக்கின்றனர்.
வாக்குமூலம் பதிவு செய்யப்படவிருக்கும் நபர்களில் ரவூப் நாடாளுமன்ற உறுப்பினர் சோவ் யூ ஹுயும் அடங்குவார். இந்த ஐவரும், மூசாங் கிங் டுரியான் மரங்களைக் காப்பாற்றுவதற்கு உள்ளூர்வாசிகளால் அமைக்கப்பட்ட கூட்டமைப்பின் உறுப்பினர்கள் என நம்பப்படுவதாக ரவூப் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஷாரில் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
பகாங் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ளூர்வாசிகளால் சட்டவிரோதமாக நடவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் 200 மூசாங் கிங் மரங்களை அமலாக்கத் தரப்பினர் வெட்டிச் சாய்த்தது தொடர்பில் எழுந்த சர்ச்சையில் அரசுப் பணியாளர்களிக் கடமையாற்ற விடாமல் தடுத்த சம்பவம் தொடர்பில் இதுவரை மூன்று போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.