ஷா ஆலாம், ஏப்ரல்.14-
கடந்த வாரம் சிரம்பானில் 16 வயது இளம் பெண் கடத்தப்பட்டதற்குப் பொறுப்பானவன் என்று நம்பப்படும் 21 வயது இளைஞரை போலீசார் இன்று காலையில் சுட்டுக் கொன்றனர்.
கிள்ளான், புக்கிட் திங்கியில் நடந்த அதிரடித் தாக்குதலில் அந்த இளைஞர் சுட்டு வீழ்த்தப்பட்ட அதே வேளையில் போலீசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் மேலும் சில ஆடவர்களைக் கைது செய்துள்ளனர் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை துணை இயக்குநர் பாஃடில் மார்சுஸ் தெரிவித்தார்.
அந்த இளம் பெண் கடத்தப்பட்டு, 20 லட்சம் ரிங்கிட் பிணைப் பணம் கோரப்பட்டது தொடர்பில், பிணைப் பணத்தில் 2 லட்சத்து 80 ஆயிரம் ரிங்கிட் குடும்பத்தினரால் செலுத்தப்பட்டுள்ளது.
தவிர தங்களிடம் இருந்த நகைகளையும் கடத்தல்காரிகளிடம் குடும்பத்தினர் ஒப்படைத்துள்ளனர். இவற்றைப் பெற்றுக் கொண்டு அந்த இளம் பெண்ணைக் கடத்தல்காரர்கள் விடுவித்துள்ளனர் என்று பாஃடில் மார்சுஸ் குறிப்பிட்டார்.
கடத்தல்காரர்கள் பதுங்கியிருந்த இடத்தில் போலீசார் மேற்கொண்ட அதிரடித் தாக்குதலில் அவர்கள் பெற்ற பிணைப் பணம் மீட்கப்பட்டுள்ளது என்று இன்று நடைபெற்ற செய்திளார்கள் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழி புரோட்டோன் வீரா காரில் பயணித்த வேளையில் அந்நபரைத் துரத்திக் கொண்டு போலீசார் சென்ற வேளையில் இந்த தாக்குதல் சம்பவம் நிழ்ந்ததாக அவர் மேலும் கூறினார்.