குவாந்தான், ஏப்ரல்.14-
பகாங் மாநில அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலங்களில் விருப்பம் போல் அத்துமீறி நுழைந்து, ஆக்கிரமித்துக் கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேன்மை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.
இது போன்ற அத்துமீறல் விவகாரங்களை அரசாங்கத் தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டு வருவதில் தம்முடைய கண்களாகவும், செவிகளாகவும் மக்கள் இருக்க வேண்டும் என்று சுல்தான் கேட்டுக் கொண்டார்.
பகாங் மாநில நிலங்களில் அதிகளவில் அத்துமீறில்கள் நடந்துள்ளன. இந்த முறை கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியமும், அவசரமும் ஏற்பட்டுள்ளதாக சுல்தான் வலியுறுத்தினார்.
அண்மையில் பகாங், ரவூப்பில் 200 க்கும் மேற்பட்ட மூசாங் கிங் டுரியான் மரங்கள், அமலாக்கத் தரப்பினரால் வெட்டப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து சுல்தான் அப்துல்லா இந்த நினைவுறுத்தலை வழங்கியுள்ளார்.