கோலாலம்பூர், ஏப்ரல்.14-
இன்று இனிய சித்திரைப் புத்தாண்டு, வைசாகி மற்றும் விஷு புத்தாண்டு ஆகியவற்றைக் கொண்டாடும் அனைவருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இந்தப் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், செழிப்பினைக் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இந்நாட்டில் நாம் பன்முகத்தன்மைக் கலாச்சாரத்தை பெருமையுடன் அனுசரிக்கிறோம். இது நமது நாட்டின் தனித்துவத்தையும், வலிமையையும் காட்டுகிறது. இந்த உணர்வு தொடரப்பட வேண்டும், பலம் பெற வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
இந்திய சமூகத்திற்கான வணிக நிதியுதவி உட்பட இந்திய சமூகத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களை அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்ளும். அதே போல் கல்வி, வழிபாட்டுத் தலங்கள், வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய அம்சங்களையும் அரசாங்கம் தொடர்ந்து மேம்படுத்தும் என்று பிரதமர் உறுதி கூறினார்.
இந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்தினரின் எதிர்காலத் தேவைக்கு இவை மிக முக்கியமானவை என்பதால் இவற்றில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.