சிப்பாங், ஏப்ரல்.14-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் சுயேட்சை வாணிப மண்டலத்தில், சுங்கத்துறை மேற்கொண்ட அதிரடி சோதனையில் பிராணிகள் உணவுப் பொட்டலங்களில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 2 கோடியே 50 லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள கஞ்சா பூக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஐரோப்பியச் சந்தைக்குக் கடத்துவதற்கான இந்த முயற்சியில் பிராணிகள் உணவுப்பொருட்களில் அந்த போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததாக சுங்கத் துறையின் சிலாங்கூர் மாநில உதவி தலைமை இயக்குநர் அஹ்மாட் தௌபிஃக் சுலைமான் தெரிவித்தார்.
இந்தச் சோதனை, கடந்த மார்ச் 15 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. இதில் மொத்தம் 210 கிலோ எடை கொண்ட கஞ்சாப் பூக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அஹ்மாட் தௌபிஃக் குறிப்பிட்டார்.
அரச மலேசிய சுங்கத் துறை இவ்வாண்டு முதல் நான்கு மாத காலகட்டத்தில் பறிமுதல் செய்த மிகப் பெரிய அளவிலான போதைப்பொருள் இதுவாகும் என்று அவர் விளக்கினார்.