கோலத் திரங்கானு, ஏப்ரல்.14-
மத்திய அரசாங்கத்துடன் உறவை வலுப்படுத்திக் கொள்ளுமாறு மேன்மை தங்கிய திரெங்கானு சுல்தான், சுல்தான் மிஸான் சைஃனால் அபிடின், மாநில அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார்.
மத்திய அரசாங்கத்துடன் திரெங்கானு மாநில அரசாங்கம் உறவை வலுப்படுத்திக் கொள்வது மிக அவசியமாகும் என்பதை சுல்தான் நினைவுறுத்தினார்.
திரெங்கானு மாநிலத்தின் மேம்பாட்டுத் திட்டங்களும், அவற்றுக்கான முன்னெடுப்புகளும் சுமூகமாக நடைபெறுவதை உறுதிச் செய்வதற்கு மத்திய அரசாங்கத்துடன் அணுக்கமான உறவைப் பேண வேண்டும் என்று சுல்தான் வலியுறுத்தினார்.
திரெங்கானு மக்களின் நல்வாழ்வு மற்றும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மாநில அரசாங்கம் இத்தகைய முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் நினைவுறுத்தினார்.
பாஸ் கட்சித் தலைமையிலான திரெங்கானு மாநில அரசாங்கத்திற்கு 12 ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் 408 மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 13.56 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு மத்திய அரசாங்கத்திற்கு சுல்தான், தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.