இரு ஆடவர்களைத் தாக்கியதாக நால்வர் மீது குற்றச்சாட்டு

பட்டர்வொர்த், ஏப்ரல்.14-

இரு நபர்களைக் கடுமையாகத் தாக்கி, காயத்தை ஏற்படுத்தியதாக நான்கு இந்திய இளைஞர்கள் பட்டர்வொர்த், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

35 வயது ஆர். ஜெகதீஸ்வரன், 21 வயது ஆர். கேஷன் ராஜ், 21 வயது T. நரேந்திரன் மற்றும் 21 வயது ஆர். ராகேஷ் ருஹிலன் ஆகிய நால்வர், நீதிபதி நோர் அஸா கஸ்ரான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

இந்த நால்வரும், இன்னும் பிடிபடாமல் இருக்கும் மேலும் ஒரு நபருடன் கூட்டாக சேர்ந்து 25 வயது ஆடவருக்கு சொந்தமான Y 125 ZR யமாஹா ரக மோட்டார் சைக்கிளைக் கொள்ளையடிக்கும் போது அந்த இளைஞரைக் கடுமையாகத் தாக்கிக் காயம் விளைவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் 23 ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் பட்டர்வொர்த், ஜாலான் தெலாகா ஆயிரில் உள்ள ஒரு கொட்டகையில் இந்த நால்வரும் இக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது,

இந்த நால்வருக்கு எதிரான இரண்டாவது குற்றச்சாட்டில் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி பட்டர்வொர்த் தாமான் சுகாரியா, மாக் மண்டின் அடுக்கு மாடி வீடமைப்புப் பகுதியில் 17 வயது இளைஞரைக் கடுமையாகத் தாக்கி, அவருக்குச் சொந்தமான இரண்டு கைப்பேசிகளைக் கொள்ளடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் அபராதம் அல்லது பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 394 ஆவது பிரிவின் கீழ் நான்கு நபர்களும் குற்ற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS