புத்ராஜெயா, ஏப்ரல்.14-
சீன அதிபர் ஸீ ஜின்பிங், நாளை செவ்வாய்க்கிழமை மலேசியாவிற்கு அதிகாரத்துவ வருகை மேற்கொள்ளவிருக்கிறார்.
சீன அதிபரின் வருகையை முன்னிட்டு சிப்பாங் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் கேஎல்ஐஏ 2 க்குச் செல்லும் பிரதான பாதை, குறிப்பிட்ட நேரத்திற்கு தற்காலிமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை ஏப்ரல் 15 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை ஒரு மணி நேரத்திற்கும், ஏப்ரல் 17 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 8.50 மணி முதல் 9.50 மணி வரை ஒரு மணி நேரத்திற்கும் தற்காலிகமாக மூடப்படும் என்று கேஎல்ஐஏவை வழிநடத்தும் மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் அறிவித்துள்ளது.
மேற்கண்ட நேரத்தில் விமான நிலையத்திற்குச் செல்ல விரும்புகின்றவர்கள், கேஎல்ஐஏ 1-லிருந்து கேஎல்ஐஏ- டிரான்ஸிட் வாயிலாக மட்டுமே தெர்மினல் 2 க்கு செல்ல அனுமதிக்கப்படுவர்.
அந்த நேரத்தில் தெர்மினல் 2 இல் தரையிறங்கும் பயணிகள், விமான நிலையத்திற்கு வெளியே செல்வதற்கு கேஎல்ஐஏ டிரான்ஸிட் வாயிலாக தெர்மினல் 1- க்கு சென்று, வெளியேற வேண்டும் என்று மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.