பிகேஆர் தேர்தலில் பிரதமர் அன்வாரின் அரசியல் செயலாளர் மணிவண்ணன் தோல்வி

ஜெம்போல், ஏப்ரல்.14-

தற்போது மிகப் பரபரப்பாக நடைபெற்று வரும் பிகேஆர் கட்சியின் தொகுதி அளவிலான தேர்தலில் நெகிரி செம்பிலான், ஜெம்போல் தொகுதித் தலைவர் தேர்தலில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் அரசியல் செயலாளர் மணிவண்ணன் கோவின் தோல்விக் கண்டார்.

ஜெம்போல் தொகுதிக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தப் போவதாகக் கூறி பரபரப்பான அறிக்கைகளுக்கு மத்தியில், தொகுதித் தலைவர் பதவியைக் கைப்பற்ற போட்டியிட்ட காப்பார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான மணிவண்ணன், பெண் வேட்பாளரான அஸிஸா சாலிம் ஷாவிடம் தோல்விக் கண்டார்.

தலைவர் பதவிக்கு ஏற்பட்ட நான்கு முனைப்போட்டியில் அஸிஸா சாலிமிற்கு 450 வாக்குகள் கிடைத்த வேளையில் மணிவண்ணனுக்கு 248 வாக்குகள் கிடைத்தன. இதர இரண்டு வேட்பாளர்களான முகமட் அஸ்ரி அப்துல்லாவிற்கு 83 வாக்குகளும், கே. மாரியப்பனுக்கு 52 வாக்குகளும் கிடைத்தன.

பிகேஆர் கட்சித் தலைமையகத்தின் அரசியல் அலுவலகச் செயலாளரான மணிவண்ணனின் இந்த தோல்வியினால், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கானத் தேர்தலில் அவரின் நிலை கேள்விக் குறியாகியுள்ளது.

WATCH OUR LATEST NEWS