தமிழ் மொழிக்கான ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் இருப்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார். ARR இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு இந்த நினைவுச் சின்னத்தை உருவாக்கும் எனவும், டிஜிட்டல் வடிவில் உள்ள இது, விரைவில் கட்டடமாக வரக்கூடும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழ் உலகின் செம்மொழிகளில் இன்றும் பரிணமித்து வளரும் மிகத் தொன்மையான மொழியாகும். குறிப்பாக தமிழ்ச் சங்கங்கள், ஆய்வுகள் மூலம் மொழியை வலுப்படுத்துவதிலும், அதனைச் செறிவாக்குவதிலும் இன்றியமையா பங்கு வகித்துள்ளன.
இப்படி புதுமை குன்றாத நம் தமிழின் நீட்சியை, அர்த்தமுள்ள தொடர்பாடல்கள் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற பொறுப்பையே முற்கால தமிழ்ச் சங்கங்களின் அர்ப்பணிப்பு நமக்கு சுட்டிக் காட்டுகிறது என்றும் ஏ.ஆர் ரஹ்மான் குறிப்பிட்டார்.