அலோர் ஸ்டார், ஏப்ரல்.14-
ஒரு பெண்ணின் நிர்வாண வீடியோப் படத்தை வெளியிடப் போவதாக அச்சுறுத்தி வந்த குற்றத்திற்காக கார் கழுவும் பணியாளர் ஒருவருக்கு அலோர் ஸ்டார் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 7 மாத சிறைத் தண்டனை விதித்தது.
30 வயது முகமட் ஹைக்டில் அப்துல் ராணி என்ற அந்த நபர், சம்பந்தப்பட்டப் பெண்ணை அச்சுறுத்தி வந்ததன் விளைவாக அந்த நபருக்கு 2,510 ரிங்கிட்டை சம்பந்தப்பட்ட பெண் செலுத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அந்த கார் கழுவும் பணியாளர், கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் அலோர் ஸ்டார், தாஜார், கம்போங் திதி ஹாஜி இட்ரிஸ் கிராமத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை, அபராதம் மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 384 ஆவது பிரிவின் கீழ் அந்த ஆடவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தார்.