ஈப்போ, ஏப்ரல்.14-
பேரா மாநிலத்தில் தீயிடப்பட்டு, சதிநாச வேலையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு தைவான் பிரஜை உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
37 வயது முதலாவது சந்தேகப் பேர்வழி கடந்த சனிக்கிழமை, ஈப்போவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கைது செய்யப்பட்டுள்ள வேளையில் 26 வயதுடைய மற்றொரு நபர், செமோர், வீடமைப்புப் பகுதியில் கைது செய்யப்பட்டதாக பேரா மாநில போலீஸ் தலைவர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சமூக வலைத்தளங்களில் அறிமுகமான இவ்விரு நபர்களும் ஒருவரையொருவர் அறிந்தவர்கள் ஆவர். இவர்கள் குறைந்த பட்சம் தீயிடப்பட்ட 8 சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சதிநாச வேலையைப் புரிவதற்கு வெளிநாட்டுக் கும்பலிடமிருந்து அந்த தைவான் பிரஜை, 997 ரிங்கிட்டைப் பெற்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.