டுரியான் மரங்கள் வெட்டப்பட்ட சம்பவம் – ரவூப் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

ரவூப், ஏப்ரல்.14-

பகாங் ரவூப்பில், தற்போது பெரும் சர்சையாக மாறியுள்ள 200 க்கும் மேற்பட்ட மூசாங் கிங் டுரியான் மரங்கள் வெட்டப்பட்ட சம்பவத்தில் அமலாக்க அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி, ரவூப் டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர் சோவ் யூ ஹுய் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரவூப் மூசாங் கிங் டுரியான் மரங்களை நடவு செய்த பட்டாளிகளின் நலனைக் காப்பதற்கு அமைக்கப்பட்ட சம்கா அமைப்பின் தலைவருமான சோவ் யூ ஹுய், விசாரணைக்காக இன்று மாலை 4 மணியளவில் ரவூப் மாவட்ட போலீஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டார். அப்போது, அவர் ரவூப் போலீஸ் நிலையத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசுப் பணியாளர்களைக் கடமையைச் செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறி குற்றவியல் சட்டம் 186 பிரிவின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சோவ் யூ ஹுய் கைது செய்யப்பட்டதை பகாங் மாநில போலீஸ் தலைவர் யஹாயா ஒத்மான் உறுதிச் செய்துள்ளார்.

ரவூப் வட்டாரத்தில் பகாங் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் சட்டவிரோதமாக மூசாங் கிங் டுரியான் மரங்களை நடவு செய்ததாகக் கூறி, உள்ளூர்வாசிகளின் 200 க்கும் மேற்பட்ட மூசாங் கிங் டுரியான் மரங்கள் கடந்த வாரம் முற்றாக வெட்டப்பட்டன.

போலீஸ், வன இலாகா, நிலம் மற்றும் கனிம வள இலாகாவின் அமலாக்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட டுரியான் மரங்கள் வெட்டப்பட்ட நடவடிக்கையை உள்ளூர்வாசிகளுடன் சேர்ந்து, அரசுப்பணியாளர்கள் கடமையாற்றுவதிலிருந்து சோவ் யூ ஹுய் தடுத்ததாகக் கூறப்படுகிறது.

இவ்விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கும் பட்சத்தில் டுரியான் மரங்கள் வெட்டப்படும் நடவடிக்கையை சோவ் யூ ஹுய் ஆட்சேபித்ததுடன் உள்ளூர்வாசிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினார்.

இவ்விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மதிக்குமாறு மேன்மை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா நினைவுறுத்தியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS