கோலாலம்பூர், ஏப்ரல்.14-
மலேசியாவின் ஐந்தாவது பிரதமர் துன் அப்துல்லா அகமட் படாவி காலமானார். அவருக்கு வயது 85. நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு, உடல் நலிவுற்ற நிலையில் சக்கர வண்டியில் அமர்ந்து வந்த அப்துல்லா அகமட் படாவி, இன்றிரவு 7.10 மணியளவில் கோலாலம்பூர் தேசிய இருதய சிகிச்சை கழகமான IJN-னில் தனது இறுதி மூச்சை விட்டார்.
முன்னாள் பிரதமர் காலமானதை, அவரின் மருமகனும், அம்னோ முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவருமான கைரி ஜமாலுடின் அறிவித்தார். அப்துல்லா, தனது இறுதி மூச்சை விடும் போது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் உடன் இருந்ததாக அ வர் குறிப்பிட்டார்.
மறைந்த அப்துல்லாவிற்கு ஜீன் அப்துல்லா என்ற மனைவியும், தனது முதலாவது மனைவி காலஞ்சென்ற எண்டோன் மாஹ்மூட்டுடனான இல்லற வாழ்வில் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். அவரின் மகள் நோரி அப்துல்லா, முன்னாள் சுகாதார அமைச்சரான கைரி ஜமாலுடினைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி நாட்டின் ஐந்தாவது பிரதமராக துன் முகாதீர் முகமதுவிடமிருந்து பதவி ஏற்ற அப்துல்லா, 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி வரை 6 ஆண்டுகள் தலைமைப் பொறுப்பை ஏற்று நாட்டை வழிநடத்தினார்.
கடந்த 1939 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி பினாங்கு, பாயான் லெப்பாஸில் பிறந்தவரான அப்துல்லா, நாட்டின் பிரதமர் பொறுப்பை ஏற்ற முதலாவது பினாங்கு வாசியாவார்.
பிரதமர் பதவியை ஏற்பதற்கு முன்னதாக வெளியுறவு அமைச்சர், உள்துறை அமைச்சர் முதலிய பதவிகளை அப்துல்லா வகித்துள்ளர்.
துணை அமைச்சர், அமைச்சர், துணைப்பிரதமர், பிரதமர் ஆகிய பொறுப்புகளை வகித்த அப்துல்லா , சிறந்த ஆங்கிலப் புலமையைப் பெற்ற பிரதமர்களில் ஒருவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவின் பிரதமர் என்ற முறையில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜுலை 19 ஆம் தேதி அமெரிக்காவிற்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்ட அப்துல்லா, அன்றைய அமெரிக்க அதிபர் George W Bush-டன் ஆற்றிய நேரடி சந்திப்பு மற்றும் இருவரும் நடத்திய கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பில் நிருபர்களின் கேள்விகளுக்கு ஒருவருக்கொருவர் சளைக்காமல் பதில் அளித்த விதம் அன்றைய நாளில் மிக பரபரப்பாக பேசப்பட்டது.
வெளியுறவு கொள்கைகளில் பரந்த அனுபவம் கொண்டவரான அப்துல்லா, நீண்ட காலம் வெளியுறவு அமைச்சர் பதவியை வகித்து வந்துள்ளார்.
1987 ஆம் ஆண்டில் அம்னோ தலைமைத்துவப் பேராட்டத்தில் துன் மகாதீரை எதிர்த்துப் போட்டியிட்ட தெங்கு ரசாலி ஹம்ஸாவின் அணியில் போட்டியிட்ட அப்துல்லா, B டீம் அணியை ஆதரித்தார் என்பதற்காக அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார்.
நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் 1991 ஆம் ஆண்டில் அமைச்சரவையில் துன் மகாதீரால் இணைத்துக்கொள்ளப்பட்ட Pak Lah என்று சுருங்க அழைக்கப்பட்ட அப்துல்லா, 1999 ஆம் ஆண்டு நாட்டின் துணைப்பிரதமராக நியமிக்கப்பட்டு, நான்கு ஆண்டுகளில் பிரதமர் பொறுப்பை ஏற்றார்.
துன் மகாதீரினால் பிரதமர் பதவிக்கு கொண்டு வரப்பட்ட அப்துல்லா, பின்னர் துன் மகாதீரின் கடும் விமர்சனத்தினாலேயே அவர் பிரதமர் பதவியை துறைக்கும் வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகினார்.
சிங்கப்பூரையும் ஜோகூரையும் இணைக்கும் இரண்டாது பால நிர்மாணிப்புத் திட்டம் தொடர்பில் , தனக்கு அடுத்து நாட்டின் பிரதமர் பதவியை ஏற்கவிருக்கும், தனது நம்பிக்கைக்குரிய அப்துல்லா, தாம் வடிவமைத்துக் கொடுத்தத் திட்டத்தை அமல்படுத்துவார் என்று துன் மகாதீர் பெரிதும் நம்பினார்.
எனினும் அந்த திட்டத்தின் சில முக்கிய அம்சங்களை அமல்படுத்த அப்துல்லா பிடிவாதமாக மறுத்து விட்டதைத் தொடர்ந்து துன் மகாதீருக்கும் பிரதமர் என்ற முறையல் அப்துல்லாவிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
பிரதமர் பதவி ஏற்ற காலகட்டத்தில் அப்துல்லா நிறைவேற்றிய பெரும் அரும் பணி, நாடு 1987 இல் நீதித்துறை நெருக்கடி எதிர் நோக்கிய போது துன் மகாதீரால் வஞ்சமான முறையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட நாட்டின் தலைமை நீதிபதி துன் சாலே அபாஸ் மற்றும் இதர ஐந்து நீதிபதிகளுக்கு நியாயம் கிடைக்க வகை செய்தார்.
மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் பொதுச் செயலாளர் அம்பிகா மற்றும் சட்டத்துறை அமைச்சர் Zaid Ibrahim ஆகியோரின் பெரும் முயற்சியில் சம்பந்தபட்ட நீதிபதிகள் மற்றும் அவரிகளின் குடும்பத்தினரிடம் அரசாங்கம் மன்னிப்பு கேட்டதுடன், துண்டிக்கப்பட்ட அவர்களின் ஓய்வூதியத் தொகை மற்றும் அவர்களுக்கான இழப்பீட்டுத் தொயை வழங்குவதற்கு அப்துல்லா வகை செய்தார் என்பது வரலாறாகும்.
அப்துல்லா பதவி வகித்த காலகட்டத்தில் இந்தியர்கள் நலன் சார்ந்த அம்சங்கள் புறக்கணிப்பு மற்றும் கோவில் உடைப்பு விவகாரம் பூதகரமாக வெடித்து, ஆளும் பாரிசான் நேஷனல் அரசாங்கத்திற்கு எதிராக அதிருப்தி அலை நாடு முழுவதும் ஏற்பட்டது.
இதன் விளைவாக 2007 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி கோலாலம்பூர் மாநகரில் இந்தியர்கள் பெரிய அளவில் திரண்டு ஹிண்ட்ராப் பேரணியின் மூலம் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திய போது அப்துல்லாவின் ஆட்சி ஆட்டம் கண்டது.
இதன் விளைவாக மறு ஆண்டான 2008 இல் நடைபெற்ற நாட்டின் 12 ஆவது பொதுத் தேர்தலில் 60 ஆண்டு கால ஆட்சியில் முதல் முறையாக பினாங்கு, சிலாங்கூர், பேரா, கெடா ஆகிய நான்கு மாநிலங்களை பிரதான எதிர்க்கட்சியான Pakatan Rakyat-டிடம் பாரிசான் நேஷனல் இழந்தது.
அப்துல்லாவின் அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த முக்கிய அமைச்சர்கள் துணை அமைச்சர்கள் பலர் தோல்விக் கண்டனர். கெராக்கான் தலைவர் டான்ஸ்ரீ Koh Tsu Koon, மஇகா தேசியத் தலைவர் துன் எஸ். Samy Vellu, அம்னோ மகளிர் பிரிவுத் தலைவி Shahrizat Abdul Jalil, PPP கட்சித் தலைவர் M. Kayveas, அமைச்சர் Zainuddin Maidin ஆகியோர் தோல்விக் கண்டவர்களில் அடங்குவர்.
பாரிசான் நேஷனல் மற்றும் துன் மகாதீரினால் கொடுக்கப்பட்ட கடும் நெருக்குதலுக்கு பிறகு மறு ஆண்டான 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி, நாட்டின் ஆறாவது பிரதமரான டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு வழிவிட்டு, பிரதமர் பதவியிலிருந்து அப்துல்லா விலகினார்.