கோலாலம்பூர், ஏப்ரல்.15-
முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அகமட் படாவியின் நல்லுடல், முழு அரசு மரியாதையுடன், கோலாலம்பூர், தேசிய பள்ளிவாசலில் வீரர்கள் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்படும் நிலையில் ஆயிரக்கணக்கானோர் அவரின் நல்லுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
நாட்டுத் தலைவர்கள், பொது மக்கள் என்ற நிலையில் இனபேதமின்றி ஆயிரக்கணக்கானோர் அந்த உன்னதத் தலைவருக்கு இறுதி மரியாதை செலுத்தி, பிரியாவிடை தந்தனர்.
அப்துல்லாவின் நல்லுடல் வீரர்கள் கல்லறையில் முன்னாள் பிரதமர்களான துன் அப்துல் ரசாக், துன் ஹுசேன் ஓன் மற்றும் துணைப்பிரதமர்களான துன் இஸ்மாயில் அப்துல் ரஹ்மான், துன் கபார் பாபா ஆகியோர் நல்லடக்கம் செய்யப்பட்ட கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்படவிருக்கிறது.
முன்னதாக, அப்துல்லாவின் உடலைத் தாங்கிய பிரேதப் பெட்டி, தேசியப் பள்ளிவாசலில் ஜாலோர் கெமிலாங் கொடியினால் போர்த்தப்பட்டு, பொது மக்களின் அஞ்சலிக்கு ஏதுவாக வைக்கப்பட்டு இருந்தது.
கடந்த 2003 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை 6 ஆண்டுகள், நாட்டின் ஐந்தாவது பிரதமராக பொறுப்பேற்ற 85 வயது அப்துல்லா, நேற்று இரவு 7.20 மணிளவில் தேசிய இருதய சிகிச்சை கழகமான ஐஜேஎன்னில் உயிர் நீத்தார்.
அப்துல்லாவின் மறைவையொட்டி தமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்ட மேன்மைத் தங்கிய பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா, துக்கத்தை அனுசரிக்கும் வகையில் மாநிலத்தில் கொடிகளை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறு உத்தரவிட்டுள்ளார்.