தெமர்லோ, ஏப்ரல்.15-
கடந்த ஞாயிற்றுக்கிழமை தெமர்லோ, தாமான் மெந்தாகாப் இண்டாவில் நாய் ஒன்றைச் சாகும் வரை அடித்துக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் மூன்று நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
19,29, 39 வயதுடைய அந்த மூவரும் ,இன்று தெமர்லோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, விசாரணைக்கு ஏதுவாக வரும் வியாழக்கிழமை வரை மூன்று தினங்களுக்கு தடுப்புக் காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர்.
அந்த மூவரும் பிராணிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர் என்று தெமர்லோ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி மாலான் ஹாசான் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்டவர்கள், நாயைச் சாகும் வரை அடித்துக் கொல்லும் காட்சியை நேரில் பார்த்த பெண்மணி ஒருவர், போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து அந்த மூவரும் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.