கோலாலம்பூர், ஏப்ரல்.15-
முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அகமட் படாவியின் நல்லுடல், முக்கியத் தலைவர்கள் மற்றும் பொது மக்களின் அஞ்சலிக்குப் பிறகு, இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தேசியப் பள்ளிவாசல், வீரர்கள் கல்லறையில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நாட்டின் இரண்டாவது பிரதமர் துன் அப்துல் ரசாக், மூன்றாவது பிரதமர் துன் ஹுசேன் ஓன், முன்னாள் துணைப்பிரதமர்களான துன் டாக்டர் இஸ்மாயில் அப்துல் ரஹ்மான் மற்றும் துன் காபார் பாபா ஆகியோரின் கல்லறைகளுக்கு அருகில் அப்துல்லாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தேசியப் பள்ளிவாசலின் முதன்மை இமாம், முகமட் ஹொஸ்னி ஏசான் தலைமையில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமைச்சரவை உறுப்பினர்கள், 4 முன்னாள் பிரதமர்களான துன் மகாதீர் முகமது, டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், டான்ஸ்ரீ முகைதின் யாசின் மற்றும் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஆகியோர் நேரில் வருகை தந்து இறுதி மரியாதை செலுத்தினர்.
சிங்கப்பூர் முன்னாள் பிரதமரும், மூத்த அமைச்சருமான லீ சியேன் லுங், தமது துணைவியார் ஹோ சிங்குடன் வருகை தந்து, அப்துல்லாவின் நல்லுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.
அப்துல்லாவின் நல்லுடல் தேசியப் பள்ளிவாசலுக்குக் கொண்டு வரப்படுவதற்கு முன்னதாக காலை 8.10 மணியளவில் அவரின் அதிகாரத்துவ இல்லமான தாசெக் பெர்டானாவில் பாதுகாப்புப் படையினரால் அரசு முழு மரியாதை வழங்கப்பட்டது.
மலேசியாவின் ஐந்தாவது பிரதமரான அப்துல்லா, நேற்று இரவு 7.20 மணியளவில் கோலாலம்பூர் தேசிய இருதய சிகிச்சை கழகமான ஐஜேஎன்னில் தமது 85 ஆவது வயதில் காலமானார்.