புத்ராஜெயா, ஏப்ரல்.15-
கலப்பு இரட்டையர் பூப்பந்து இணையான சென் தாங் ஜீ-தோ ஈ வெய் தனித்தனியாகப் பிரிந்து செல்லும் முடிவை மறுபடிசீலனை செய்ய வேண்டி வரலாம். 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கிற்கான ரோட் டு கோல்ட் (RTG) திட்டத்தில் அவர்கள் சேர்க்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அச்சூழ்நிலை ஏற்படலாம்.
தேசிய விளையாட்டாளர்கள் பொறுப்புணர்வையும் அர்ப்பணிப்பையும் காட்ட வேண்டும். ஒரு சமயத்தில் உலகின் 3வது இடத்தைப் பிடித்த இந்த அந்த ஜோடி அத்திட்டத்தில் பங்கேற்க அரசாங்கம் கணிசமான முதலீடு செய்துள்ளதாக இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹான்னா இயோ தெரிவித்தார்.
தாங் ஜீ-ஈ வெய் ஜோடியாக இருந்த நிலையில் அவர்களின் வளர்ச்சிக்காக ஏற்கனவே பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விட்டன. எனவே எந்த முடிவையும் ஒருதலைப்பட்சமாக எடுக்க முடியாது என்று அவர் வலியுறுத்தினார்.
அவர்களின் கூட்டுச் சாதனைகளின் அடிப்படையில் இருவரும் RTG திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் மீண்டும் இணைய விரும்பவில்லை என்றால், அவர்கள் உயரடுக்குத் திட்டத்தில் இருந்து விலக்கப்பட்டு, அதன் நிதி மற்றும் கட்டமைப்பு ஆதரவை இழக்க நேரிடும். எனவே இந்த ஜோடியைப் பிரிக்கும் எண்ணத்தை மலேசிய பூப்பந்து சங்கம் (BAM) மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஹன்னா விரும்புகிறார்.