குவாந்தான், ஏப்ரல்.15-
பகாங் மாநில ஆட்சியாளர் அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மாட் ஷா நேற்று மலேசியாவின் முதல் மிதக்கும் வெள்ளப் பேரிடர் நடவடிக்கை மையமான Floodcom ஐ திறந்து வைத்தார். உலு தெம்பெலிங்கில் மலேசிய அணுசக்தி நிறுவனமும் பஹாங் பொதுப் பாதுகாப்புப் படையும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த Floodcom, குறிப்பாக வெள்ளப் பேரிடர் காலங்களில் செயல்பாடுகளையும் மீட்புக்கான வசதிகளையும் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலு தெம்பெலிங்கில் தியோமான் தீவு பகுதிகளிலும் பொருளாதாரத் துறையை, குறிப்பாக சுற்றுலாவை மேம்படுத்த சிறப்பு அமைப்பை உருவாக்கவும் சுல்தான் உத்தரவிட்டார். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கிராமப்புறங்களில் சிறு விவசாயத் திட்டங்களை உருவாக்குவது குறித்து விரிவான ஆய்வு நடத்தவும் அவர் விருப்பம் தெரிவித்தார். புதிய நிலங்களை ஆராயாமல், இருக்கும் நிலத்திலேயே நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், அதை உள்நாட்டுத் தேவைக்கு அல்லது வெளிநாடுகளுக்கு விற்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.