பகாங் அரசாங்கத்திற்கு ஆதரவு – அரசு சாரா அமைப்பு மனு தொடங்கியுள்ளது

குவாந்தான், ஏப்ரல்.15-

ரவூப்பில் சட்டத்திற்குப் புறம்பாக டுரியான் தோட்டங்கள் அமைக்கப்பட்ட விவகாரத்தில் பகாங் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து ஓர் அரசு சாரா அமைப்பு மனு ஒன்றைத் தொடங்கியுள்ளது. selamatkantanahpahang.com என்ற இணையத்தளம் மூலம் இந்த மனுவில் கையெழுத்திடலாம்.

பகாங் மாநில சமூக நடவடிக்கை மன்றம், குறிப்பாக நிரந்தர வனப்பகுதிகளிலும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளிலும் இந்த பிரச்சினையைக் கையாள்வதில் அம்மாநில முதல்வர் வான் ரொஸ்டி வான் இஸ்மாயில் தலைமையிலான அரசாங்கத்தின் உறுதியான நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது குற்றம் என்றும், சட்டத்தைப் பாகுபாடின்றி நிலைநாட்ட வேண்டும் என்றும் பகாங் ஆட்சியாளர் அல் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மாட் ஷா வலியுறுத்தியதை அந்த அமைப்பு வரவேற்றுள்ளது. அனுமதியின்றி சட்டத்திற்குப் புறம்பாக நிலம் ஆக்கிரமிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையில், Save Musang King Alliance – Samka என்ற மற்றோர் அமைப்பு, சர்ச்சைக்குரிய நிலத்தில் டுரியான் மரங்களை வெட்டும் நடவடிக்கையை நிறுத்தக் கோரி இதே முறையின் மூலம் சுமார் 400 கையெழுத்துகளைச் சேகரித்து வருகிறது. சம்கா ஆலோசகரும் ரவூப் நாடாளுமன்ற உறுப்பினருமான சோவ் யூ ஹுய் கூறுகையில், இந்த மனு பகாங் ஆட்சியாளரிடமும் பிரதமர் அன்வார் இப்ராஹிமிடமும் சமர்ப்பிக்கப்படும் என்றார்.

WATCH OUR LATEST NEWS