சிப்பாங், ஏப்ரல்.15-
இன்று முதல் வியாழக்கிழமை வரை மூன்று நாள் அதிகாரப்பூர்வப் பயணமாக சீன அதிபர் ஸீ ஜின்பிங் மலேசியாவுக்கு வருகை புரிந்துள்ளார். கோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலையத்தின் பூங்கா ராயா வளாகத்தில் அவருக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்பு அளித்தார். சீனத் தலைவரை ஏற்றி வந்த சிறப்பு விமானம் மாலை 6 மணியளவில் தரையிறங்கியது.
பேரரசர் சுல்தான் இப்ராஹிமின் அழைப்பின் பேரில் ஸி ஜின்பிங் வந்துள்ளார். இது மலேசியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் உறவின் தொடர்ச்சியைக் குறிக்கிறது. 2013-ல் குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற பிறகு அவர் மலேசியாவுக்கு வருவது இது இரண்டாவது முறையாகும்.