கோலாலம்பூர், ஏப்ரல்.15-
கோலாலம்பூரிலும், சிலாங்கூரிலும் உள்ள குழந்தைப் பராமரிப்பு மையங்களுக்கான கட்டணங்களை நிர்ணயிக்கும் ஒப்பந்தத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 22 நிறுவனங்களுக்கு எதிராக மலேசிய போட்டித்தன்மை ஆணையமான MyCC முன்மொழிவு முடிவை வெளியிட்டுள்ளது. MyCC தலைவர் இட்ருஸ் ஹருன் கூறுகையில், இந்த முன்மொழிவு முடிவு கட்டத்தில், அந்த நிறுவனங்கள் போட்டிச் சட்டம் 2010, பிரிவு 4 ஐ மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குழந்தைப் பராமரிப்பு கட்டணங்களை உயர்த்துவது குறித்து விவாதித்தது மட்டுமல்லாமல், சங்கக் கூட்டத்தில் ஒருமித்த முடிவை அந்நிறுவனங்கள் எட்டியதாகவும் MyCC கண்டறிந்துள்ளது. இந்த முடிவு பின்னர் சுற்றறிக்கை மூலம் அனைத்து சங்க உறுப்பினர்களுக்கும் பிற குழந்தைப் பராமரிப்பு மைய உரிமையாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. கோலாலம்பூரிலும் சிலாங்கூரிலும் குழந்தைப் பராமரிப்புச் சேவைகளை வழங்குவதில் போட்டித்தன்மையைத் தடுக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக MyCC கருதுகிறது. இருப்பினும், MyCC வெளியிட்ட முன்மொழிவு முடிவு ஆரம்பக்கட்ட கண்டுபிடிப்புகள் மட்டுமே என்றும், எந்தவொரு நிறுவனமும் சட்டத்தை உறுதியாக மீறியதாகக் கருத முடியாது என்றும் இட்ருஸ் கூறினார். இந்த முன்மொழிவு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் நேற்று MyCC முன்மொழிந்த அபராதம் குறித்தும் உத்தரவுகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிறுவனங்களுக்கு முன்மொழிவு முடிவைப் பெற்ற 30 நாட்களுக்குள் MyCC க்கு எழுத்துப்பூர்வமான விளக்கத்தை சமர்ப்பிக்கவும், பின்னர் நிர்ணயிக்கப்படும் தேதியில் வாய்மொழி விளக்கத்தை வழங்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் விளக்கத்தைக் கேட்டறிந்து அனைத்து ஆதாரங்களையும் பரிசீலித்த பின்னரே MyCC இறுதி முடிவை வெளியிடும் என்று அவர் கூறினார்.