ஈப்போ, ஏப்ரல்.16-
பேரா மாநில எதிர்க்கட்சித் தலைவரும், பாஸ் கட்சியைச் சேர்ந்த செமாங்கோல் சட்டமன்ற உறுப்பினருமான ரஸ்மான் ஸாகாரியா, சட்டமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்வதிலிருந்து 6 மாதங்களுக்கு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அந்த மதவாத கட்சியின் பேரா மாநிலத் தலைவருக்கு விதிக்கப்பட்ட இடை நீக்க உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.
ரஸ்மான் ஸாகாரியாவை இடை நீக்கம் செய்வதற்குக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை பக்காத்தான் ஹராப்பானின் பெர்சாம் சட்டமன்ற உறுப்பினர் ஒங் பூன் பியோ முன்மொழிந்த வேளையில், பாரிசான் நேஷனலின் ருங்குப் சட்டமன்ற உறுப்பினர் ஷாருல் ஸாமான் யாயா வழிமொழிந்தார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தெலுக் இந்தானில் சீன நாட்டுக் கொடி பறக்கவிடப்பட்ட சம்பவம் தொடர்பில் துவேஷத் தன்மையிலான சில அறிக்கைளை ரஸ்மான் ஸாகாரியா வெளியிட்டதைத் தொடர்ந்து சட்டமன்றத்தின் சிறப்பு விசாரணைக் குழு முன்னிலையில் அவர் நிறுத்தப்பட்டார்.
சீனக் கொடி பறக்கவிடப்பட்டதற்கும், கெபாயாங் சட்டமன்ற உறுப்பினர் ங்கா கோர் மிங் மற்றும் பாசீர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினர் வூ கா லியோங் ஆகியோருக்கும் தொடர்பு இருக்கிறது என்று அடிப்படைற்ற குற்றச்சாட்டை ரஸ்மான் ஸாகாரியா சுமத்தினார்.