கோலாலம்பூர், ஏப்ரல்.16-
சீன அதிபர் ஸீ ஜின்பிங்கின் மலேசிய வருகையையொட்டி, சிறப்புச் செய்திகளை வெளியிட்டு இருக்கும் சீனப் பத்திரியான சின் சியூ நாளிதழ், தனது முதல் பக்கச் செய்தியில் பிரசுரித்துள்ள சீனக் கொடி, மலேசியக் கொடி ஆகியவற்றில் மலேசிய கொடியில் பிறை சின்னம் இல்லாதது தொடர்பில் நடவடிக்கை எடுக்கக் கோரி முன்னாள் கல்வி அமைச்சர் பேராசிரியர் டாக்டர் மஸ்லீ மாலிக், உள்துறை அமைச்சை கேட்டுக் கொண்டார்.
ஒரு படகு, இரு நாடுகளில் கொடிகளை ஏந்தி வரும் நிலையில், மலேசியாவின் ஜாலோர் கெமிலாங் கொடியில் பிறை சின்னம் இல்லாதது, கண்டித்தக்க நடவடிக்கையாகும் என்று முன்னாள் சுங்கை ரெங்காம் நாடாளுமன்ற உறுப்பினரான மஸ்லீ மாலிக் வலியுறுத்தியுள்ளார்.
இவ்விவகாரத்தில் ஒரு போதும் விட்டுக் கொடுக்கும் போக்கை கடைப்பிடிக்கக்கூடாது. காரணம், ஜாலோர் கெமிலாங் கொடி என்பது மலேசியாவின் தன்மானத்தைப் பறைசாற்றும் ஓர் அடையாளமாகும். அதனை ஏளனப்படுத்துவதற்கு எவரையும் அனுமதிக்க இயலாது என்று மஸ்லீ மாலிக் குறிப்பிட்டார்.