பிகேஆர் தொகுதித் தேர்தல் முடிவு, பலர் அதிர்ச்சி

கோலாலம்பூர், ஏப்ரல்.16-

7 மாநிலங்களில் நடைபெற்று முடிந்துள்ள பிகேஆர் கட்சியின் தொகுதிகளுக்கான தேர்தலில் முக்கியத் தலைவர்கள் சிலர் தோல்விக் கண்டு இருப்பது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

மிக குறைந்த வாக்குகளில் தாங்கள் தோல்வி கண்டு இருப்பதாக அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவு, விசித்திரமாகவும், முரண்பாடாகவும் உள்ளது என்று பலர், கட்சியின் தேர்தல் குழுத் தலைவர் டாக்டர் ஸாலிஹா முஸ்தாபாவிடம் மேல்முறையீடு செய்யவிருக்கின்றனர்.

தொகுதி தேர்தலில் பலர் ஓர் அணியாக போட்டியிட்டுள்ளனர். தலைவர், துணைத் தலைவர், உதவித் தலைவர் மற்றும் 15 செயற்குழு உறுப்பினர்கள் என்ற அளவில் ஒரே அணியாக நின்று தேர்தல் களத்தைச் சந்தித்துள்ளனர்.

இவ்வாறு அணியாக போட்டியிடும் போது, கிடைக்கக்கூடிய வாக்குகள் வித்தியாசம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அளவிலேயே இருக்கும். ஆனால், இந்த முறை நடைபெற்ற பிகேஆர் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டவர் தோல்விக் கண்ட நிலையில் அவரின் அணியில் உள்ள அனைவரும் அதிகமான வாக்குகளில் வெற்றிப் பெற்று இருப்பது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

சிலாங்கூர் ஷா ஆலாம் தொகுதியின் நடப்புத் தலைவரும், அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினருமான ரோட்ஸியா இஸ்மாயில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட கோத்தா அங்கேரிக் சட்டமன்ற உறுப்பினர் நஜ்வான் ஹலிமியிடம் 314 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்விக் கண்டுள்ளார்.

தனக்கு 899 வாக்குகளும், நஞ்வான் ஹாலிமியிற்கு 1,213 வாக்குகளும் கிடைத்தன. தன்னைத் தவிர, தனது அணியில் போட்டியிட்ட அனைவரும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக ரோட்ஸியா இஸ்மாயில் கூறுகிறார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் தனது அணியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் கிடைத்த வாக்குகளை விட தமக்குதான் மிக குறைந்த வாக்குகள் கிடைத்து இருப்பது, எங்கேயோ தவறு நடந்து இருக்கிறது என்பதை உணர முடிவதாக ரோட்ஸியா இஸ்மாயில் குற்றஞ்சாட்டுகிறார்.

தனது அணியைச் சேர்ந்த அனைவருக்கும் கிட்டத்தட்ட சமமாக கிடைத்த பிளாக் ஓட்டுகளில் தாம் ஒருவர் மட்டும் விடுப்பட்டு, தோல்விக் கண்டு இருப்பது எப்படி என்று அந்த நாடாளுமன்ற உறுப்பினர் வினவுகிறார்.

WATCH OUR LATEST NEWS