தசை பலவீன நோயினால் போராடுகிறார் முன்னாள் பெருநடை வீரர் ஜி. சரவணன்

கோலாலம்பூர், ஏப்ரல்.16-

ஒரு காலத்தில் தேசிய விளையாட்டுப் போட்டியின் அடையாளமாகவும், வலிமையின் நாயகனாகவும் விளங்கிய, 1998 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தங்கத்தை வென்று மலேசியர்களுக்கு மட்டுமின்றி இந்தியர்களுக்கு பெருமை சேர்த்த முன்னாள் பெருநடை வீரர் ஜி. சரவணன், தற்போது நிற்கவே முடியாமல் அவதியுற்று வருகிறார்.

நெடுந்தூர நடைப்பயணத்தில் மின்னல் வேகத்தில் கால்களை நகர்த்தி, 50 கிலோ மீட்டர் தூரம் வரையில் பாய்ந்த சரவணனின் கால்நடைகளில் பழுது ஏற்பட்டு இருப்பது மிகுந்த சோகமாகும்.

55 வயதுடைய சரவணனுக்கு படிப்படியாக ஏற்பட்ட தசை பலவீனம், உடல் செயல்பாட்டு இழுப்புக்கு வழித்துள்ளது.

இந்த நோய்க்கு சிகிச்சை நிவாரணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு இருப்பதால் மலேசிய தேசிய விளையாட்டுத் துறையில் மின்னும் நட்சத்திரமாக ஒரு காலத்தில் வளம் வந்த சரவணனின் எதிர்பார்ப்பு தற்போது இருண்ட உலகமாகியுள்ளது.

நாட்டின் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் மொக்தார் டஹாரி, இது போன்ற தசை பலவீனத்தில் பாதிக்கப்பட்டு, அந்த நோயினால் நீண்ட காலம் போராடி கடந்த 1991 ஆம் ஆண்டு தனது 39 ஆவது வயதில் காலமானார்.

சரவணனுக்கு அடுத்த மே மாதம் சரியாக 55 வயது பூர்த்தியாகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு, பினாங்கில் ஜூனியர் பெருநடை வீரர்களுக்கான பயிற்சியாளராக இருந்தபோது, அதிர்ச்சியூட்டும் இந்த நோய் குறித்து அவருக்கு முதல் முறையாக தெரியவந்தது.

தெளிவற்ற பேச்சு, உணவை உட்கொள்வதில் சிரமம், இரவு நேரத்தில் தூங்கும் போது கால்களில் அடிக்கடி ஏற்படும் பிடிப்புகள் முதலியவற்றினால் அவதியுற்று வந்த சரவணன், அதற்கான சிகிச்சையைப் பெற்றும், நிவாரணம் காண முடியவில்லை.

அவரது ஆயுட்காலம் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நீடிக்க வாய்ப்பில்லை என்று அவருக்குச் சொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டில் 79 கிலோவாக இருந்த அவரின் உடல் எடை த ற்போது 53 கிலோவாகக் குறைந்துள்ளது.

துல்லிமான செயல்பாடு, சகிப்புத்தன்மை முதலிய குணாதிசயங்களைப் பெற்ற சரவணனுக்கு ஏற்பட்டுள்ள இந்த விநோத நோய், அவரை மட்டுமல்ல. அவரின் குடும்ப உறுப்பினர்களையும் நிலைத்தடுமாற வைத்துள்ளது.

வெல்ல முடியாத நெருக்கடியில் சரவணனின் இந்த உணர்ச்சிப் போராட்டம், ததும்பிக் கொண்டு இருப்பது வேதனையளிக்கிறது.

விளையாட்டுத் துறையில் சரவணனின் கடந்த கால தேசிய சாதனையால் அவர் மிக போற்றப்பட்டவராக விளங்கிய போதிலும், தற்போது விநோத நோயினால் அவர் போராடும் நிலையில், விளையாட்டு வீரர்களை முழுமையாக ஆதரிக்க முடியாத ஒரு அமைப்பால் அவர் இப்போது கைவிடப்பட்டுள்ளார்.

எண்ணங்கள் மற்றும் பிரார்த்தனைகளுக்கு அப்பால், சிகிச்சை, மருந்து, சிகிச்சை மற்றும் தொடர்புடைய தேவைகள் உள்ளிட்ட அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகளுக்கு சரவணனுக்கு அவசரமாக பொதுமக்களின் ஆதரவு தேவை. சரவணனின் மன நிலை நன்றாக உள்ளது. ஆனால், சரளமாகப் பேச முடியாத நிலையில் உள்ளார்.

சரவணனின் மனைவி எம். சசிகலாதான், தற்போது அவருக்கு உறுதுணையாக இருந்து, ஓர் ஊன்றுக்கோலைப் போல் அவரை இமைக் காத்து வருவதைப் போல அருகில் இருந்தவாறு கவனித்து வருகிறார்.

1998 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கத்தை வெற்று சரவணன் சாதனைப் படைத்தார். சரவணனுக்கு, வாக்குறுதி அளித்ததைப் போல புரோட்டோன் பெர்டானா கார், பரிசாக வழங்குவதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதால், மறைந்த தமிழ்ப் பத்திரிக்கை ஆசிரியர் ஆதி. குமணன், பொது மக்கள் மூலம் நிதி திரட்டி, சரவணனுக்கு காரைப் பரிசாக தந்தார் என்பது வரலாறாகும்.

WATCH OUR LATEST NEWS