சிரம்பான், ஏப்ரல்.16-
ஜசெக, ஒரு பல்லினக் கட்சியாக விளங்கிய போதிலும் அதில் இந்தியர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க, அதிகமான இந்தியர்கள் கட்சியில் உறுப்பினர்களாக இணைய வேண்டும் என்று கட்சியின் புதிய உதவித் தலைவர் J. அருள் குமார் கேட்டுக் கொண்டார்.
நம்முடைய பலம் எங்கே இருக்கிறதோ, அங்கேதான் பல சாதனைகளை நாம் நிகழ்ந்த முடியும். அந்த வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஜசெக.வில் இணையக்கூடிய புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரிக்கப்பட வேண்டும்.
அவ்வாறு அதிகரிக்கப்படுமானால், அதற்கேற்ற நிலையில் நம்முடைய பிரதிநிதித்துவத்தைக் கோர முடியும் என்று நெகிரி செம்பிலான் வீடமைப்பு, ஊராட்சித்துறை மற்றும் போக்குவரத்து ஆட்சிக்குழு உறுப்பினரான அருள் குமார் குறிப்பிட்டார்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மட்டும் ஜசெக.வில் இந்திய உறுப்பினர்களின் எண்ணிக்கை 35 முதல் 40 விழுக்காடு வரை இருக்கின்றனர். இதே போன்று இதர மாநிலங்களிலும் இருக்குமானால், கட்சி, மாநிலம் மற்றும் அரசாங்க அளவில் நம்முடைய பிரநிதித்துவம் தொடர்ந்து அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக அருள் குமார் குறிப்பிட்டார்.
ஜசெக.வில் இது நாள் வரை நெகிரி செம்பிலான் மாநில அளவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த அருள் குமார், கடந்த மார்ச் 16 ஆம் தேதி நடைபெற்ற ஜசெக தேர்தலில் 30 பேர் கொண்ட மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர்களில் 24 ஆவது இடத்திற்கு தேர்வாகி சாதனைப் படைத்துள்ளார்.
மத்திய அளவில் தாம் சந்தித்த முதலாவது கட்சித் தேர்தல் இது என்றாலும், தாம் உதவித் தலைவர்களின் ஒருவராக நியமிக்கப்பட்டு இருப்பது மூலம் பொறுப்புகளும், கடமைகளும் அதிகரித்து இருப்பதை அருள் குமார் ஒப்புக் கொண்டார்.
ஜசெகவை ஒரு பலம் வாய்ந்த கட்சியாக உருவாக்கும் முயற்சியில், இந்தியர்களின் பிரதிநிதித்துவத்தைக் கூட்டுவதற்கு அதிகமான இந்தியர்கள் கட்சியில் இணைந்தால் மட்டுமே இது சாத்தியமாகலாம் என்று நீலாய் சட்டமன்ற உறுப்பினரான அருள் குமார் வலியுறுத்தினார்.
கோலாலம்பூரில் ஜசெக. தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற தமிழ் ஊடகவிலாளயர்களுடான சிறப்புச் சந்திப்புக் கூட்டத்தில் அருள் குமார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜசெக.வில் ஒரு சமூகத்திற்கு மட்டும் அதிகமான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறும் போது, அதில் நம்முடைய இந்தியர்களின் பிரதிநிதித்துவமும், பலமும் கூடுதலாக இருக்க வேண்டுமானால் கண்டிப்பதாக நமது உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்க வேண்டும். அப்போதுதான் மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் பல்வேறு வாய்ப்புகளை நாம் பெற முடியும் என்று அருள் குமார் விளக்கினார்.