முன்னாள் குடிநுழைவு அதிகாரி கைது

குவாந்தான், ஏப்ரல்.16-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட அந்நிய நாட்டவர்களிடம் எவ்வித சோதனையும் நடத்தாமல் அவர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் மலேசிய குடிநுழைவுத் துறையின் முன்னாள் உயர் அதிகாரி ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு கோடி ரிங்கிட்டுக்கும் அதிகமான தொகையை லஞ்சமாக பெற்றதாக கூறப்படும் அந்த அதிகாரி, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மினால் வளைத்துப் பிடிக்கப்பட்டார்.

விமான நிலையத்தில் குடிநுழைவு அதிகாரிகளுக்கும், அந்நிய நாட்டவர்களைக் கொண்டு வரும் கும்பலுக்கும் இடையில் தொடர்புப் பாலமாக இருந்ததாகக் கூறப்படும் அந்த முன்னாள் குடிநுழைவு அதிகாரி, தன்னுடைய சேவைக்காக சம்பந்தப்பட்ட கும்பலிடம் ஒரு கோடி ரிங்கிட்டிற்கும் அதிகமான தொகையைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்று காலையில் குவாந்தான், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குக் கைவிலங்கிடப்பட்ட நிலையில் கொண்டு வரப்பட்ட 50 வயதுடைய அந்த முன்னாள் அதிகாரியை விசாரணைக்கு ஏதுவாக வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

சம்பந்தப்பட்ட நபர், கடந்த ஆண்டு ஜனவரி முதல் தேதி விருப்புரிமையின் அடிப்படையில் முன்கூட்டியே பணி ஓய்வு பெற்றவர் ஆவார்.

அவர் விமான நிலையத்தில் தனக்கு நன்கு அறிமுகமானவர்களைப் பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட கும்பலிடம் லஞ்சம் பெற்று, இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தாகக் கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS