சிரம்பான், ஏப்ரல்.16-
சிரம்பானில் உள்ள ஒரு பேரங்காடியில் வேலை முடிந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஓர் இந்திய நபரை வெட்டுக்கத்தியுடன் வந்த கும்பல் ஒன்று சரமாரியாகத் தாக்கி விட்டுத் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் போலீசார் மூவரைக் கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு 8.15 மணியளவில் சிரம்பான், ஜாலான் சுங்கை உஜுங், கேட்வேய் பேரங்காடி வளாகத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பில் 35 க்கும், 47 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த மூவரும் சம்பவம் நிகழ்ந்த 24 மணி நேரத்திற்குள் போர்ட்டிக்சன் வட்டாரத்தில் வளைத்துப் பிடிக்கப்பட்டதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஹத்தா சே டின் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு வெட்டுக் கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.