ஷா ஆலாம், ஏப்ரல்.16-
பொய்யான தகவலை வழங்கி, தனிநபர்களுக்குப் பிறப்புப் பத்திரம் பெற்றுத் தருவதற்கு விண்ணப்பம் சமர்ப்பித்த மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் 14 பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது. சம்பந்தப்பட்ட மோசடிக் கும்பலுக்கு எதிராக எஸ்பிஆர்எம் தொடங்கியுள்ள ஓப் பெர்த் நடவடிக்கையின் வாயிலாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 14 பேரும் கைவிலங்கிடப்பட்டு நிலையில் இன்று ஷா ஆலாம், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டு, விசாரணைக்கு ஏதுவாக அவர்களை வரும் ஏப்ரல் 20ஆம் தேதி வரை 5 நாட்களுக்குத் தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற ஆணையை எஸ்பிஆஎம் பெற்றுள்ளது.
பிடிபட்டுள்ள 20 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடையவர்களில் 11 பேர் ஆண்கள் என்றும் மூவர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஷா ஆலாமில் உள்ள சிலாங்வர் மாநில எஸ்பிஆர்எம் அலுவலகத்திற்கு நேற்று அழைக்கப்பட்ட இந்த 14 பேரும் விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டனர்.
சம்பந்தப்பட்ட குழந்தைகள் மருத்துவமனைகளில் பிறந்ததற்கான எந்தவொரு தரவுகளும் இல்லை. ஆனால், அந்த குழந்தைகள் மருத்துவமனைகளில் பிறந்ததைப் போல பொய்யான தகவல்களை வழங்கி, தேசிய பதிவு இலாகாவை நம்ப வைத்து பிறப்புப் பத்திரம் மற்றும் அடையாளக் கார்டுகளை இந்த கும்பல் பெற்றுத் தந்துள்ளது.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய இந்த மோசடி வேலைகளை சம்பந்தப்பட்ட கும்பல், கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து 2023 ஆம் ஆண்டு வரையில் செய்து வந்துள்ளது என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.