செத்தியா ஆலாம், ஏப்ரல்.16-
நாட்டில் 102 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ்பள்ளியாகக் கருதப்படும் செத்தியா ஆலாம், நோர்த் ஹம்மோக் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் துன் டாக்டர் ச.சாமிவேலு அறிவியல் கூட மேம்பாட்டிற்கு மேலாளர் வாரியத் தலைவர் ஆறுமுகம் வேண்டுகோளுக்கு இணங்க ம.இ.கா தனது கல்விக் கழகமான எம்ஐஈடி கல்வி மேம்பாட்டுக் கழகம் வழி 50 ஆயிரம் வெள்ளி நன்கொடையை வழங்கியது.
நோர்த் ஹம்மோக் தமிழ்ப்பள்ளிக்கு இன்று புதன்கிழமை காலையில் வருகை மேற்கொண்ட ம.இ.கா தேசிய தலைவரும் எம்ஐஈடி தலைவருமான டான் ஶ்ரீ ச.விக்னேஸ்வரன் 50 ஆயிரம் வெள்ளிக்கான மாதிரி காசோலையையும், அசல் காசோலையையும் எல்பிஎஸ் தலைவர் ஆறுமுகத்திடம் வழங்கினார்.
முன்னதாக, நோர்த் ஹம்மோக் தமிழ்ப்பள்ளியில் மேற்கொள்ளப்படவிருக்கும் அறிவியல்கூடம், இதன்வழி மாணவர்கள் அடையும் நன்மைகள், அறிவியல் கூடத்திற்கு தேவைப்படும் இதர தேவைகள் தொடர்பான விவரங்களை ஆசிரியர் ஒருவர் டான் ஶ்ரீ விக்னேஸ்வரனிடம் விளக்கிக் கூறினார்.
விளக்கத்தைப் பெற்ற பின்னர் டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் 50 ஆயிரம் வெள்ளியுடன் தமது சொந்த நன்கொடையாக ஒரு தொகையை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
பின்னர் பள்ளி வளாகம், வகுப்பறைகளைச் சுற்றிப் பார்த்த டான் ஶ்ரீ விக்னேஸ்வரன், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் சிலரையும் சந்தித்துப் பேசினார்.
இந்த நிகழ்வில் பள்ளியின் எல்பிஎஸ் தலைவர் ஆறுமுகம், சிலாங்கூர் மாநில ம.இ.கா தலைவர் டத்தோ சங்கர் ராஜ் ஐயங்கார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.