கோலாலம்பூர், ஏப்ரல்.16-
செய்தித்தாள்கள் உட்பட ஊடக நிறுவனங்கள், தங்கள் செய்தியின் உள்ளடக்கத்தை, பத்திரிகையாக அச்சிடப்படுவதற்கு முன்பு, அதனை நன்கு மதிப்பாய்வு செய்து, தவறுகள் இல்லாமல் இருப்பதை உறுதிச் செய்து கொள்வது, தலையாய கடமையாகும் என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
மலேசியாவிற்கு மூன்று நாள் அதிகாரத்துவ வருகையை மேற்கொண்டுள்ள சீனப்பிரதமர் ஸீ ஜின்பிங் வருகையையொட்டி சிறப்புக் கட்டுரைகளை வெளியிட்டுள்ள முன்னணி சீனப் பத்திரிக்கையான சின் சியூ டெய்லி தனது முதல் பக்க செய்தியில் வெளியிட்டுள்ள மலேசிய ஜாலோர் கெமிலாங் கொடியில் பிறை சின்னம் இல்லாதது, குறித்து பலர் கண்டனக் கணைகளைத் தொடுத்து வருகினற்னர்.
இதன் தொடர்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ள மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், ஒரு நாட்டின் அடையாளம் மற்றும் இறையாண்மையின் சின்னமாக தேசியக் கொடி திகழ்கிறது என்றார்.
தேசியக்கொடி என்பது வெறும் வண்ணமய வடிவிலான துணி மட்டுமல்ல. அது போராட்டம், வரலாறு, சுதந்திரம் மற்றும் மக்களின் உணர்வு என பல்வேறு அர்த்தம் பொதித்த இறையாண்மையின் அடையாள சின்னமாகும் என்று மாமன்னர் குறிப்பிட்டார்.
பல இன சமூகத்தினரிடையே தேசப்பத்தியுடனும், பெருமையுடனும் பறக்கவிடுப்படும் ஜாலோர் கெமிலாங் தேசியக் கொடி சிறுமைப்படுத்தப்படுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது, ஏற்றுக்கொள்ள இயலாது என்று மாமன்னர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தற்செயலான தொழில்நுட்பக் கோளாறினால் நடந்த தவற்றுக்கு சின் சியூ டெய்லி சீனப்பத்திரிக்கை நாட்டு மக்களிடையே இன்று பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது.
எனினும் அந்த சீனப் பத்திரிக்கைக்கு உள்துறை அமைச்சு காரணம் கோரும் கடிதத்தை இன்று வழஙகியுள்ளது என்பதுடன் அதன் தலைமை ஆசிரியர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.