ஈப்போ, ஏப்ரல்.17-
பேரா, மெங்லெம்பு, தாமான் ராசி ஜெயாவில் உள்ள ஓர் உணவகத்தில் ஈப்போ மாநகர் மன்ற அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கை பெரும் அமளி துமளியில் முடிவுற்றது.
உணவகத்தின் முன் சட்டவிரோதமாகப் போடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மேஜைகள் மற்றும் நாற்காலிகளைப் பறிமுதல் செய்வதற்கு ஈப்போ மாநகர் மன்ற அமலாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அமலாக்க அதிகாரிகளின் நடவடிக்கையில் அதிருப்தியுற்று கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஆடவர் ஒருவர், அமலாக்க அதிகாரி ஒருவரின் முகத்திலேயே குத்தியதாகக் கூறப்படுகிறது.
நேற்று காலையில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பில் மாலை 6.43 மணியளவில் ஈப்போ மாநகர் மன்ற அமலாக்க அதிகாரி ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் அபாங் ஸைனால் அபிடின் அபாங் அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
போலீசார் மேற்கொண்ட பூர்வாங்க விசாரணையில் முன்னதாக, உணவகத்தின் மேஜைகள் மற்றும் நாற்காலிகள் அகற்றப்பட்ட போது சினமூட்டும் செயல் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபர், அமலாக்க அதிகாரிகளை நோக்கி கடும் வார்த்தைகளைப் பயன்படுத்தியதுடன், அவர்களின் பணிக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளைத் தாங்கள் விசாரணை செய்து வருவதாக அபாங் ஸைனால் குறிப்பிட்டார்.
முன்னதாக, இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. உணவகத்தாருக்கும், அமலாக்க அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளுவில் மாது ஒருவர் மயங்கி கீழே விழுந்தார்.