புத்ராஜெயா, ஏப்ரல்.17-
மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆகியோரின் தலைமைத்துவத்தில் மலேசியா வெற்றியின் சிகரத்தை எட்டிப் பிடிக்கும் என்று மலேசியாவிற்கான 3 நாள் அதிகாரத்துவ வருகையை முடித்துக் கொண்டு கம்போடியா புறப்பட்டுள்ள சீன அதிபர் ஸீ ஜின்பிங் நம்பிக்கை தெரிவித்தார்.
12 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாசியாவிற்குத் தாம் வருகை புரிந்ததாக நினைவுகூர்ந்த ஸீ ஜின்பிங், அந்த வருகைக்குப் பிறகு, இப்போது மலேசியாவைத் தாம் பார்க்கும் போது நாடு துரித வளர்ச்சி கண்டுள்ளது என்றும் நவீனமயமாக்கலில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என்றும் புகழாரம் சூட்டினார்.
“கடந்த 2013 ஆம் ஆண்டில் நான் மலேசியாவிற்கு வருகை புரிந்த போது, அதன் இயற்கை அழகு, கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் மக்களின் தயாள குணம் ஆகியவற்றால் மிகவும் ஈர்க்கப்பட்டேன்.
அந்த வகையில் சுல்தான் இப்ராஹிம் மற்றும் அன்வார் இப்ராஹிம் ஆகியோரின் தலைமைத்துவத்தில் மலேசியா ஒரு போட்டியிடத்தக்க நாடாக உருவாகும் என்பதுடன் மடானி மலேசியாவை மேம்படுத்துவதில் மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை என்று ஸீ ஜின்பிங் குறிப்பிட்டார்.
கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி மலேசியாவிற்கு மூன்று நாள் அதிகாரத்துவ வருகையை மேற்கொண்ட ஸீ ஜின்பிங்கிற்கு மலேசிய அரசாங்கம் சார்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று இரவு புத்ராஜெயா ஶ்ரீ பெர்டானாவில் அளித்த விருந்து உபசரிப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு கூறினார்.
கடந்த 50 ஆண்டு காலமாக சீனாவும், மலேசியாவும் அரச தந்திர உறவைக் கொண்டிருப்பதில் இரு நாடுகளுக்கு இடையில் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதையும் தமது உரையில் ஸீ ஜின்பிங் திட்டவட்டமாக வலியுறுத்தினார்.
“ஒரு பாறையைப் போல உறுதியாகக் கட்டமைக்கப்பட்ட சீனா – மலேசியா உறவு, தொடர்ந்து வலுவடையும்” என்று ஸீ ஜின்பிங் நம்பிக்கைத் தெரிவித்தார்.