சிரம்பான், ஏப்ரல்.17-
2008 ஆம் ஆண்டு, 12 ஆவது பொதுத் தேர்தலுக்கு பிறகு இந்தியர்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டது என்றாலும், அந்த அரசியல் விழிப்புணர்வு அத்துடன் நின்று விடாமல் இந்தியர்கள் மத்தியில் அரசியல் பலம் உருவாக்கப்பட வேண்டும் என்று ஜசெக உதவித் தலைவர் ஜெ. அருள் குமார் கேட்டுக் கொண்டார்.
ஜசெக.வின் வாயிலாக இத்தகைய அரசியல் பலத்தை உருவாக்கிக் கொள்வதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு. அதற்கு இந்திய இளைஞர்கள் ஜசெக.வில் உறுப்பினர்களாக அதிகளவில் இணைய வேண்டும் என்று நெகிரி செம்பிலான் வீடமைப்பு, ஊராட்சி மற்றும் போக்குவரத்து துறை ஆட்சிக்குழு உறுப்பினருமான அருள் குமார் கேட்டுக் கொண்டார்.
கோலாலம்பூரில் உள்ள ஜசெக தலைமையகத்தில் தமிழ் ஊடகவியலாளர்களுடன் நடத்தப்பட்ட சிறப்பு சந்திப்பின் போது அருள் குமார், தமது எண்ண அலைகளைப் பகிர்ந்துக் கொண்டார்.