கோலாலம்பூர், ஏப்ரல்.17-
சீனாவின் தேசிய வளர்ச்சி மறுசீரமைப்பு ஆணையத்துடன் (NATIONAL DEVELOPMENT AND REFORM COMMISSION) இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மலேசியாவுடன் கையெழுத்தாகியுள்ளன என்று இலக்கவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
மலேசியா- சீனா ஆகிய இரு நாடுகளின் இலக்கவியல் பொருளாதாரங்களை ஊக்குவிக்கவும் மேம்படுத்தவும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடனும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. கையெழுத்தான 31 ஒப்பந்தங்களில் இரண்டு இலக்கவியல் அமைச்சின் ஒப்பந்தங்களாகும்.
மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் சீன நாட்டு அதிபர் ஸீ ஜின்பிங் முன்னிலையில், மலேசியாவை பிரதிநிதித்து இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோவும், சீனாவின் தேசிய வளர்ச்சி மற்றும் மறுசீரமைப்பு ஆணையத்தின் தலைவர் ஸெங் ஷன்ஜீ இடையே இந்த இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாற்றப்பட்டன.
இலக்கவியல் பொருளாதார தொடர்புடைய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், இரு தரப்பும் பல்வேறு துறைகளில் ஒத்துழைக்க இணக்கம் கண்டுள்ளன. கொள்கை ஒருங்கிணைப்பு மற்றும் ஒழுங்குமுறை ஒத்திசைவு, தொழில் துறையின் இலக்கவியல் மாற்றம், இலக்கவியல் தொழில்நுட்ப மையம் மற்றும் மனிதவள மேம்பாட்டு வளர்ச்சி ஆகியன ஆகும்.
இதன் வழி, நகரங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஊக்குவிக்க மலேசியா, என்டிஆர்சியுடன் இணைந்து இலக்கவியல் திட்டங்களைச் செயல்படுத்தவுள்ளது.
அத்துடன் இலக்கவியல் பொருளாதாரம் தொடர்பான கூட்டு பணிக்குழுவும் உருவாக்கப்படும். இதில் சீனாவின் தேசிய தரவுத் துறை மற்றும் மலேசிய இலக்கவியல் அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடம்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.