புத்ராஜெயா, ஏப்ரல்.17-
நம்பிக்கை மோசடி வழக்கில் தமக்கு விதிக்கப்பட்டுள்ள சிறை, அபராதம் மற்றும் பிரம்படித் தண்டனையை ரத்து செய்யக் கோரி, மூவார் எம்.பி. யும், மூடா கட்சியின் முன்னாள் தலைவருமான சையிட் சாடிக் சையிட் அப்துல் ரஹ்மான் செய்து கொண்ட மேல்முறையீட்டில், புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.
தீர்ப்பு இன்று அளிக்கப்படும் என்று எதிபார்க்கப்பட்ட நிலையில், காலையில் மேல்முறையீடு மீதான விசாரணை நடைபெற்றது.
டத்தோ அஹ்மாட் ஸைய்டி இப்ராஹிம் தலைமையிலான மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினர், இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்குத் தலைமையேற்று இருந்தனர்.
இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையைக் கடந்த மார்ச் 20 ஆம் தேதி ஒத்தி வைத்த அப்பீல் நீதிமன்றம், இன்று ஏப்ரல் 17 ஆம் தேதி விசாரணையை மீண்டும் செவிமடுத்தது.
எனினும் தீர்ப்பை வழங்குவதற்கு தங்களுக்கு சற்று கால அவகாசம் தேவைப்படுவதாகக் கூறி வரும் ஏப்ரல் 24 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைப்பதாக நீதிபதி டத்தோ அஹ்மாட் ஸைய்டி இப்ராஹிம் தெரிவித்தார்.
பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவான அர்மாடாவிற்குச் சொந்தமான பணத்தை நம்பிக்கை மோசடி செய்ததாகக் கூறி குற்றஞ்சாட்டப்பட்ட அதன் முன்னாள் தலைவரான 33 வயது சையிட் சாடிக்கிற்கு கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் குற்றவாளியே என்று தீர்ப்பு அளித்தது.
சையிட் சாடிக்கிற்கு 7 ஆண்டு சிறை, ஒரு கோடி ரிங்கிட் அபராதம் மற்றும் 2 பிரம்படித் தண்டனை ஆகியவற்றை உயர் நீதிமன்றம் விதித்தது.