கோலாலம்பூர், ஏப்ரல்.18-
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடினுக்கு அவதூறு ஏற்படுத்தியதற்காக அவருக்கு 25 லட்சம் ரிங்கிட்டை இழப்பீட்டுத் தொகையாக வழங்கும்படி சமயப் போதகர் ஒருவருக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
கைரி ஜமாலுடின் சுகாதார அமைச்சராகச் சேவையாற்றி வந்த காலத்தில், கோவிட் 19 நோய் பரவல் தொடர்பிலான தடுப்பூசியின் உண்மை நிலை குறித்து அவர் பொய்யுரைத்துள்ளதாக ஒரு சமயப் போதகரான ரஷிக் அல்வி என்பவர் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அந்த சமயப் போதகருக்கு எதிராக கைரி ஜமாலுடின் அவதூறு வழக்கைத் தொடுத்து இருந்தார்.
இந்த அவதூறு வழக்கு விசாரணையில் அந்த தடுப்பூசியின் தன்மை குறித்து சுகாதார அமைச்சர் என்ற முறையில் கைரி ஜமாலுடின் பொய்யுரைக்கவில்லை என்றும், உண்மை நிலையைத்தான் விளக்கினார் என்றும் கண்டறியப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற நீதிபதி ராஜா அஹ்மாட் மோஹ்ஸானுடின் ஷா ராஜா மோஹ்ஸான் அஹ்மாட் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
அம்னோவின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் என்ற முறையில் கைரியின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியதற்காக அவருக்கு 25 லட்சம் ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையை வழங்கும்படி அந்த சமயப் போதகருக்கு நீதிபதி ராஜா அஹ்மாட் மோஹ்ஸானுடின் உத்தரவிட்டார்.