கேஎல்ஐஏவில் 36 கிலோ கஞ்சா பறிமுதல்

சிப்பாங், ஏப்ரல்.18-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கடிதம் மற்றும் பொருள் பட்டுவாடா மையத்தில் 36.091 கிலோ எடையிலான கஞ்சா கடத்தல் முயற்சியை மலேசிய சுங்கத்துறை வெற்றிகரமாக முறிடியத்துள்ளது.

கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி சோதனையில் 35 லட்சத்து 80 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக மலேசிய சுங்கத் துறையின் மத்தியப் பிரதேசத்திற்கான இடைக்கால உதவி தலைமை இயக்குநர் டாக்டர் அஹ்மாட் தௌவிஃக் சுலைமான் தெரிவித்தார்.

இவ்வகை போதைப் பொருளை, ஐரோப்பாவிற்குக் கடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

சரக்கு விமானத்தில் கடிதம் மற்றும் பட்டுவாடாப் பொருட்களை ஏற்றுவதற்கு முன்னதாக, பார்சல் பொருட்களின் தோற்றத்தை உள்ளீடு செய்யும் கணினித் திரையில் சோதனை செய்த போது சந்தேகத்திற்கு இடமாக தெரிந்த சில பெட்டிகள் கண்டு பிடிக்கப்பட்டன.

பின்னர் அந்தப் பெட்டிகள் ஒதுக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்ட போது அவற்றில் சிறு சிறு பொட்டலங்களில், பெரியளவில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தவிர, அந்தப் பெட்டிகளின் முகவரியும், முறையாக இல்லாதது தெரியவந்தது. அந்த பெட்டிகள் யாருக்குச் சொந்தம், யாருக்கு சேர்ப்பிக்கப்படவிருந்தது முதலிய விவரங்கள் ஆராயப்பட்டு வருவதாக டாக்டர் அஹ்மாட் தௌவிஃக் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS