சிரம்பான், ஏப்ரல்.18-
கடந்த திங்கட்கிழமை சிரம்பான், கேட்வேய் பேரங்காடியில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் ஆடவர் ஒருவரைப் பாராங்கினால் வெட்டிக் கடும் காயத்தை விளைவித்ததாக கட்டட வளாக நிர்வாகி ஒருவர் சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
47 வயது R. சுரேஷ் கண்ணா என்று அந்த நிர்வாகி நீதிபதி டத்தின் சுரித்தா பூடின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
அந்த பேரங்காடியில் வேலை முடிந்து ஓய்வெடுத்துக் கொண்டு இருந்த 40 வயது மதிக்கத்தக்க ஓர் இந்திய ஆடவரை சுரேஷ் கண்ணா பாராங்கினால் சரமாரியாக வெட்டிப் படுகாயம் விளைவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்.
கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 8.10 மணியளவில் சிரம்பான், சுங்கை உஜோங், கேட்வேய் பேரங்காடியின் முதல் மாடியில் கைப்பேசி கடை ஒன்றில் சுரேஷ் கண்ணா இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கும்பல் ஒன்று நடத்திய இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து சுரேஷ் கண்ணா உட்பட மூன்று பேரை போலீசார் வளைத்துப் பிடித்தனர்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 326 ஆவது பிரிவின் கீழ் சுரேஷ் கண்ணா குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
எனினும் தனக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து சுரேஷ் கண்ணா விசாரணை கோரியதால் அவரை நிபந்தனையின் அடிப்படையில் 15 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனிவில் விடுவிக்க நீதிபதி டத்தின் சுரித்தா பூடின் அனுமதி அளித்தார்.