சிரம்பானில் இளம் பெண் கடத்தல் – எட்டாவது சந்தேக நபரான மேலும் ஓர் இந்திய ஆடவர் கைது

சிரம்பான், ஏப்ரல்.18-

சிரம்பானில் 20 லட்சம் ரிங்கிட் பிணைப் பணம் கோரி 16 வயது இளம் பெண் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 20 வயது மதிக்கத்தக்க மேலும் ஓர் இந்திய ஆடவர் கைது செய்யப்பட்டார்.

இத்துடன் இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட வேளையில் பிடிபட்ட இந்திய நபர்களின் எண்ணிக்கை எட்டு பேராக அதிகரித்துள்ளது.

ஆகக் கடைசியாக பிடிபட்ட எட்டாவது சந்தேகப் பேர்வழியான 20 வயதுடைய அந்த இளைஞர், நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் கிள்ளானில் கைது செய்யப்பட்டார் என்று நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அஹ்மாட் ஸாவிஃர் யூசோஃப் தெரிவித்தார்.

அந்த நபர் சிரம்பான் நீதிமன்றத்தில் இன்று நிறுத்தப்பட்டு, அவரை இரண்டு நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு போலீஸ் துறைக்கு, மாஜிஸ்திரேட் சையிட் பாஃரிட் சையிட் அலி அனுமதி அளித்திருப்பதாக டத்தோ அஹ்மாட் ஸாவிஃர் குறிப்பிட்டார்.

அந்த 20 வயது நபர், 1961 ஆம் ஆண்டு கடத்தல் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

16 வயது இளம் கடத்தல் தொடர்பில் 21 வயது ஓர் இந்திய இளைஞர், கிள்ளான், புக்கிட் திங்கியில் கடந்த திங்கட்கிழமை காலையில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அத்துடன் இந்த கடத்தலில் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படும் 20 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய 4 பெண்கள், 4 ஆண்கள் என மொத்தம் 8 இந்திய நபர்களை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை 50 வயது மதிக்கத்தக்க ஓர் இந்தியப் பெண், கோலாலம்பூர் செராஸில் பிடிபட்டார். விசாரணைக்கு ஏதுவாக அவரை 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர்.

இந்த எண்மரும் 16 வயது பெண்ணைக் கடத்திச் சென்று 20 லட்சம் ரிங்கிட் பிணைப்பணம் கோரிய கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது.

அந்த இளம் பெண்ணின் குடும்பத்தினர் 2 லட்சத்து 80 ஆயிரம் ரிங்கிட் ரொக்கம் மற்றும் நகைகளை ஒப்படைத்தப் பின்னர் அந்த பெண் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் சிரம்பானில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பெட்டியில் பிணைப் பணத்தைப் பெற்றதாக நம்பப்படும் 21 வயது இந்திய இளைஞரை போலீசார், கிள்ளான் புக்கிட் திங்கியில் விரட்டிச் சென்று அதிரடித் தாக்குதல் நடத்தியதில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

WATCH OUR LATEST NEWS