ஆயர் குரோ, ஏப்ரல்.18-
பென் வடிவில் உள்ள கேமராவைப் பயன்படுத்தி, தனது முன்னாள் அண்ணியின் நிர்வாணப் படத்தை வீடியோவில் ரகசியமாகப் பதிவு செய்ததாக பொறியியலாளர் ஒருவர் மலாக்கா, ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
35 வயதுடைய அந்த பொறியியலாளர், மாஜிஸ்திரேட் நுருல் அஷிகின் ரொஸ்லி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
40 வயதுடைய தனது முன்னாள் அண்ணிக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த வக்கிரச் செயலை, சம்பந்தப்பட்ட பொறியியலாளர் கடந்த 2024 ஆம் ஆண்டு மத்திய வாக்கில் மலாக்கா தெங்கா மாவட்டத்தில் தஞ்சோங் கிளிங் பகுதியில் உள்ள தனது வீட்டின் குளியல் அறையில் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 5 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 509 ஆவது பிரிவின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.