கோலாலம்பூர், ஏப்ரல்.18-
இம்மாதம் 1 ஆம் தேதி புத்ரா ஹைட்ஸில் நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடி விபத்து தொடர்பான தொடக்கக் கட்ட தொழில்நுட்ப விசாரணை அறிக்கை அடுத்த வாரத்திற்குள் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட தோண்டுதல் பணிகளின் மூலம் வெடிப்புக்குள்ளான எரிவாயுக் குழாய்களைக் கண்டுபிடிக்கும் முயற்சி வெற்றி அளித்திருப்பதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் தெரிவித்தார்.
போலீஸ் படை, தீயணைப்புத் துறை மற்றும் வேலையிட பாதுகாப்பு சுகாதாரத் துறை ஆகியவை சம்பவ இடத்தில் தடயவியல் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருவதையும் டத்தோ ஹுசேன் ஓமார் விளக்கினார்.
சம்பவ இடத்தில் மண் தோண்டும் பணிகள், கிட்டத்தட்ட நிறைவு பெற்று விட்டன. இன்னும் ஒரு வாரத்தில் பூர்வாங்க அறிக்கை கிடைத்து விடும் என்று டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்தார்.
சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா தலைமையில் இன்று நடைபெற்ற பண்டார் கண்ட்ரி ஹோம்ஸ் போலீஸ் நிலையத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் டத்தோ ஹுசேன் ஓமார் இதனைத் தெரிவித்தார்.