கோலாலம்பூர், ஏப்ரல்.18-
வேப் எனப்படும் மின்னியல் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய மாநில அரசாங்கங்கள் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.
தற்போது 13 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் கூட போதைப்பொருள் கலந்த மின்னியல் சிகரெட்களைப் பயன்படுத்துவது கவலையளிக்கிறது.
எனவேதான், இத்தகைய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று அயோப் கான் விளக்கினார்.
சில மாநிலங்கள் வேப் விற்பனையைத் தடை செய்ய முயற்சி எடுத்துள்ளதையும், அது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதையும் அயோப் கான் சுட்டிக் காட்டினார்.
அதே போன்ற முயற்சியை பிற மாநிலங்களும் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.