புத்ராஜெயா, ஏப்ரல்.18-
நாட்டில் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வனப்பகுதிகள், தேசிய மற்றும் மாநில பூங்காக்கள், கடல் பூங்காக்கள், புவிசார் பாரம்பரியத் தளங்கள், புவிசார் தளங்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள சில வணிக வளாகங்களில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவது தற்போது தடை செய்யப்பட்டுள்ளது.
புத்ராஜெயாவில் நேற்று நடைபெற்ற சுற்றுச்சூழல் அமைச்சர் மற்றும் சுற்றுச் சூழலுக்குப் பொறுப்பான மாநில நிர்வாக ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சந்திப்புக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனை இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் தெரிவித்தார்.
ஒரு முறை உபயோகிக்ககூடிய பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதற்கான இந்தத் தடை, பல்பொருள் அங்காடிகள், 24 மணி நேர கடைகள், பெட்ரோல் நிலையங்கள், துரித உணவு உணவகங்கள், சங்கிலித் தொடர்புக் கடைகள், மருந்தகங்கள் மற்றும் பிற தொடர்புடைய வளாகங்கள் உள்ளிட்ட நிலையான வளாகங்களுக்கும் பொருந்தும் என்று அமைச்சர் நிக் நஸ்மி இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.