கூலாய், ஏப்ரல்.19-
ஜோகூர், கூலாயில் உள்ள பூஃன் யியூ தனியார் இடைநிலைப்பள்ளியில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் பாலியல் சேட்டை நடவடிக்கைகள் தொடர்பில் அச்சம்பவங்களுக்கு தார்மீகப் பொறுப்பேற்று பள்ளியின் முதல்வர் பதவி விலகியுள்ளார்.
கான் சுவாங் சீ என்ற அந்த முதல்வர் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி வழங்கிய பதவி விலகல் கடிதத்தைப் பள்ளியின் மேலாளர் வாரியம், ஒரு மனதாக ஏற்றுக் கொண்டுள்ளதாக அந்த வாரியம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பள்ளியைச் சேர்ந்த 16 வயது மாணவன், பள்ளியில் பயிலும் மாணவிகளின் புகைப்படங்களைச் சேகரித்து, அவர்களின் முகத் தோற்றத்தைப் பயன்படுத்தி AI தொழில்நுட்பத்தின் மூலம் ஆபாசப்படமாகத் தயாரித்து சமூக வலைத்தளங்களில் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பந்தப்பட்ட மாணவனின் இத்தகைய வக்கிரச் செயலால் பாதிக்கப்பட்ட மாணவிகள், பள்ளியின் முதல்வர் என்ற முறையில் கான் சுவாங் சீ, அந்த மாணவனுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எதனையும் எடுக்காமல் கண்டித்து அனுப்பி விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட மாணவிகள் போலீசில் புகார் செய்து, பிரச்னை மேலோங்கிய போது, பள்ளி மேலாளர் வாரியம் அந்த மாணவனைப் பள்ளியிலிருந்து நீக்கியது.
அந்த மாணவனின் விவகாரத்தை, சம்பந்தப்பட்ட முதல்வர், உடடினயாகக் கையாளத் தவறிவிட்டார் என்று கூறப்படுகிறது.